‘மரணம் உங்கள் வீட்டு வாசற்படியைத் தட்டும்போது
அதனை எந்த பிரார்த்தனை கொண்டு அலங்கரிப்பீர்கள்?’ என்று கேட்கிறது தாகூரின் கவிதை வரிகள்.
என தொடங்கி தன் மீளா துயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நண்பர் ஆசிப்பின் மீண்டு(ம்) வருகிறேன் நண்பர்களே!!
வலைப்பூவில் அவர் எழுதியிருப்பது:
” யாஸ்மினிடம் கடைசியாகப் பேசியது நினைவுக்கு வருகிறது. “இன்றைக்கு ஒருநாள் மட்டும் கஷ்டப்பட்டு கொஞ்சம் வலியைப் பொறுத்துக்கம்மா. இனிமேல் வாழ்நாள் முழுக்க உனக்கு வலிக்கவே வலிக்காது” எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி நான் என்று நினைக்கும்போது மனது மரத்துப் போகிறது. வலியோடேனும் அவள் வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.”
இணைய உலகின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான ஆசிப்பின் சாத்தான் குளத்து வேதம் அனைத்துவித மணம், நிறங்கள் எனக்கூடிய பல வண்ண வலைமலராகும்.
நுனிப்புல் மேய்வதைப் பற்றி நேற்று எழுதியதை தனது வலைப்பூவின் தலைப்புடன் இணைத்து வாழ்த்தி பின்னூட்டம் இட்டிருக்கும் உஷா ராமச்சந்திரனின் நுனிப்புல் நான் தொடர்ந்து படித்து வரும் ஒன்று. நுனிப்புல் என அவர் தலைப்பிட்டிருந்தாலும் அதில் உண்மையில்லை. ஆரம்பத்திலிருந்தே அவரது பல படைப்புகளை படித்துவருவதால் இதை நான் ஆணித்தரமாக கூறுகிறேன். நீண்டக்காலமாக இணைய உலகிலும் ஊடகங்களிலும் எழுதிவரும் இவரின் மலர் அரங்கத்திற்குள் நுழைந்தாலே உங்களுக்கு அது புரிந்துவிடும். தோழியர்களுடன் இணைந்து முதன் முதலில் பெண்களுக்கான வலைப்பதிவு ஆரம்பித்தவர்களில் இவர் முக்கியமானவர் என்பது கூடுதல் செய்தி.
பின்நவீனத்துவம் என்றாலே பலர் ஓடிஒளிந்துக்கொள்ளும் இந்த காலத்தில் விடாமல் அதில் தீவிர ஆர்வம் காட்டுவதுமட்டுமல்லாமல், நவீனக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என முழுவதும் வித்தியாசமான தளத்தில் இயங்கி வருபவரும், பல அருமையான திரைப்படங்களை பற்றிய செய்திகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து எழுதிவருபவருமான நண்பர் அய்யனாரின் தனிமையின் இசை என்னும் வலைமலர் அடர்ந்த வனாந்தரத்தில் எங்கோ பூத்து தன் மணத்தால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அற்புதமான ஒரு வலைப்பூவாகும்.
ஜெசிலாவின் கிறுக்கல்கள் என தன் வலைப்பூவை குறிப்பிட்டிருந்தாலும் அதில் அவர் கிறுக்கியுள்ளவை கிறுக்கல்களல்ல என்பதை நாம் படிக்கும் போது தெரிந்துக்கொள்ளலாம். தொடர்ந்து மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பெண்ணியம் பற்றியும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் குரல்கொடுத்து எழுதிவரும் இவர் கவிதைகளிலும் கலக்குகிறார் என்பதை நீங்கள் அவரது வலைப்பூவிற்கு சென்று பார்த்தால் தெரிந்துக்கொள்வீர்கள்.
அரசியல் கட்டுரைகள் மட்டும் தான் இவர் எழுதுவார் என நான் நினைத்திருக்கும் பொழுது அருமையான கதைகளும் எழுதி என்னை திகைக்கவைத்தவர் பினாத்தல் சுரேஷ். பினாத்தல்கள். மெல்லிய நகைச்சுவை இழையோட இவர் எழுதியிருக்கும் பல கட்டுரைகளில் மறைந்திருக்கும் கருத்துக்கள் இவரது ஆழமான பார்வையை வெளிப்படுத்துகிறது.
மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்து பதிவர்களும் அமீரக பதிவர்கள். ஒரு சிலர் விட்டும் போயிருக்கலாம். இதில் உஷா மட்டும் இப்பொழுது துபாயில் இல்லை என நினைக்கிறேன்.
இன்னும் வரும்.